இருதுருவ அரசியல் இன்று உருவானதல்ல, சுதந்தரத்துக்கு முன்பு முளைவிட்டது. இன்று ஆலமரமாக ஆர்த்தெழுந்து நிற்கிறது. ஆகப் பெரிய அரசியல் ஆளுமைகள் பலரும் அந்த அரசியலைச் செய்திருக்கிறார்கள். ஒரே கட்சியில் இருந்துகொண்டு சிலர், இருவேறு கட்சிகளில் இருந்துகொண்டு இன்னும் சிலர்.
ராஜாஜி Vs சத்தியமூர்த்தி
இருபதுகளில் ஆரம்பித்த இவர்களுடைய மோதல் இறுதிவரைக்கும் நீடித்தது. ராஜாஜிக்குத் தேசியத் தலைவர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு.
சத்தியமூர்த்திக்கோ தொண்டர்கள் பலம் அதிகம். இன்று காங்கிரஸை விமரிசிப்பதற்கு கோஷ்டி அரசியல் என்ற பதத்தைப் பரவலாகப் பயன்படுத்துகிறோம். அதற்கான விதையை ஊன்றியவர்கள் சாட்சாத் இவர்கள் இருவரும்தான்.
சுதந்தர கோஷம் உச்சத்தில் இருந்தபோதே காங்கிரஸில் கோஷ்டி கானம் உரத்து ஒலித்தது. பிரிட்டிஷார் காலத்தில் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற அணியில் இருந்தவர் ராஜாஜி. தேர்தல் வழியாக ஆட்சிமன்றத்துக்குள் நுழைந்தே தீரவேண்டும் என்பது சத்தியமூர்த்தியின் நிலைப்பாடு. அப்போது முதலே காங்கிரஸில் அய்யர் கோஷ்டி, ஆச்சாரியார் கோஷ்டி என்று இரண்டு கோஷ்டிகள் இயங்க ஆரம்பித்துவிட்டன.
1931ல் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் தலைவர் பதவி ராஜாஜிக்கு, துணைத் தலைவர் பதவி சத்தியமூர்த்திக்கு என்று முடிவானது. மூன்றாவது நபர் முளைப்பதைத் தடுக்கச் செய்யப்பட்ட ஏற்பாடு இது. முதலில் தலைவர் தேர்தல் நடந்தது. ராஜாஜி வெற்றி பெற்றார். அடுத்து, துணைத்தலைவர் தேர்தல்.
சத்தியமூர்த்தியின் பெயரை முன்மொழிய வேண்டும். ஆனால் சர்தார் வேதரத்தினம் பெயரை முன்மொழிந்தார் ராஜாஜி. அதிர்ச்சியடைந்தது சத்தியமூர்த்தி தரப்பு. காரியம் முடிந்ததும் கைகழுவிவிட்டார் ராஜாஜி என்பது புரிந்தது. பின்னர் சுதாரித்துக்கொண்டு போட்டியில் இறங்கினர். தனது வேட்பாளராக திருவண்ணாமலை அண்ணாமலையை நிறுத்தினார் சத்தியமூர்த்தி. நிலைமை சிக்கலாகும் என்பதை உணர்ந்து இறங்கி வந்தார் ராஜாஜி. விளைவு, துணைத்தலைவர் பதவி சத்தியமூர்த்தி வசம் வந்து சேர்ந்தது.
1937 தேர்தலில் காங்கிரஸ் வென்றது. ராஜாஜி முதல்வரானார். தேர்தல் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்த சத்தியமூர்த்திக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் சத்தியமூர்த்தியின் இடத்துக்கு டி.எஸ்.எஸ். ராஜனைக் கொண்டுவந்தார் ராஜாஜி. பழைய பாக்கிக்குப் பழிதீர்த்துவிட்டார் ராஜாஜி என்ற விமரிசனம் எழுந்தது. இதுதான் ராஜாஜி - சத்தியமூர்த்தி மோதலின் முக்கியப்புள்ளி.
அதன்பிறகும் மோதல்கள் தொடர்ந்தன. அவற்றின் விளைபொருள்களில் ஒன்றே காமராஜருக்குக் கிடைத்த தலைமைப் பதவி. 1939ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சத்தியமூர்த்தி நின்றார். இறுதியில் ஓமந்தூரார் வென்றார். பின்னணியில் இருந்தவர் ராஜாஜி.
பதிலடி கொடுத்தே தீரவேண்டும் என்று புறப்பட்டார் சத்தியமூர்த்தி. அதற்கடுத்த ஆண்டு நடந்த தலைவர் தேர்தலில் தனக்குப் பதிலாக தன்னுடைய சிஷ்யரான காமராஜரை நிறுத்தினார் சத்தியமூர்த்தி. அவரை எதிர்த்து ராஜாஜி நிறுத்திய வேட்பாளர் சி.பி. சுப்பையா. இறுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் வெற்றிபெற்றார். ராஜாஜி - சத்தியமூர்த்தி ஈகோ யுத்தத்தில் இதுவொரு திருப்புமுனை. ஆம். அந்தப் புள்ளியில் இருந்துதான் ராஜாஜி ஙண் காமராஜர் என்ற அரசியலே ஆரம்பித்தது.
பெரியார் VS ராஜாஜி
ஆத்திகம்தான் ராஜாஜியின் சுவாசம்; பெரியாருக்கோ பகுத்தறிவுதான் பிரதானம். அங்கு ஆரம்பித்த இருதரப்பு மோதல் இறுதிவரைக்கும் நீடித்தது(தனிப்பட்ட நட்பு விதிவிலக்கு). நீதிக்கட்சியை வீழ்த்த ராஜாஜி வியூகம் வகுத்தபோது, “காங்கிரஸ் கட்சிக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?’ என்று பட்டியல் போட்டுப் பிரச்சாரம் செய்தவர் பெரியார். 1937ல் ஆட்சிக்கு வந்ததும் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை எடுத்தார் முதலமைச்சர் ராஜாஜி. அப்போது தமிழ் ஆர்வலர்களையும் காங்கிரஸ் எதிர்ப்பாளர்களையும் ஓரணியில் திரட்டி எதிர்ப்பைத் தீவிரப்படுத்தினார் பெரியார். “ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்” என்ற தலைப்பில் புத்தகம் போட்டு விமர்சிக்கும் அளவுக்கு இருவருக்கும் இடையே மோதல் உச்சத்தில் இருந்தது.
சுதந்தரத்துக்குப் பிறகு நடந்த தேர்தலுக்குப் பிறகு ராஜாஜி முதல்வரானார். அப்போது அவர் தேர்தலில் போட்டியிடாமல் மேலவை உறுப்பினராகி, முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். அப்போது, “புறக்கடை வழியாக ஆட்சியைப் பிடித்துவிட்டார் ராஜாஜி” என்று விமர்சித்தார் பெரியார். அதற்கு ராஜாஜியோ, ‘வீட்டுக்குள் திருடன் வந்துவிட்டால் புறக்கடை வழியாக வந்தாவது சொத்தைக் காப்பாற்றவேண்டியது வீட்டுக்காரனின் கடமை’ என்றார்.
அரைநாள் கல்வித்திட்டத்தை அமல்படுத்தினார் ராஜாஜி. வர்ணாசிரம சிந்தனையின் விளைச்சலாக வந்த குலக்கல்வித் திட்டம் அது என்று விமர்சித்து, போராட்டங்களைத் தீவிரப்படுத்தினார் பெரியார். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு முளைத்து, ராஜாஜி பதவி விலகினார்.
குலக்கல்வித் திட்டத்தை ரத்து செய்த காமராஜரைப் பச்சைத் தமிழர் என்று பாராட்டினார் பெரியார். காங்கிரஸை ஒழிப்பதே என்னுடைய வேலை என்று முழங்கிய அவர், ராஜாஜியை எதிர்ப்பதற்காகவே காங்கிரஸை ஆதரித்தார். காமராஜரின் ஆட்சியை ராஜாஜி எப்போது விமரிசனம் செய்தாலும் முதல் பதிலடி பெரியாரிடம் இருந்தே வந்தது.
காமராஜருக்காகக் காங்கிரஸை ஆதரிக்கிறார் பெரியார் என்று தெரிந்தபோது ராஜாஜி தேர்வு செய்தது திமுகவை. அண்ணாவுடன் அதிக நெருக்கம் காட்டினார். அறுபதுகளின் மத்தியில் நான்காம் கட்ட மொழிப்போரை திமுக முன்னெடுத்தபோது அதற்கு ராஜாஜி ஆதரவு கொடுத்தார். ஆனால் பெரியாரோ, மொழிப்போரைக் கடுமையாக விமர்சித்தார். பெரியாரின் இந்த முடிவுக்கு முதல் காரணம் திமுக என்றால் முக்கியமான காரணம் ராஜாஜியின் ஆதரவுதான். 1967ல் ஆட்சிக்கு வந்தபிறகு திமுகவும் பெரியாரும் நெருங்கியபோது, தனது எதிரியான காமராஜருடன் கைகோக்கும் அளவுக்குச் சென்றார் ராஜாஜி. அந்த வகையில் பெரியாரும் ராஜாஜியும் பரஸ்பரம் விட்டுக்கொடுக் காத எதிரிகளாகவே இறுதிவரை இருந்தனர்.
ராஜாஜி VS காமராஜர்
ராஜாஜி சத்தியமூர்த்தி மோதலின் நீட்சிதான் இது. 1952 தேர்தலில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ராஜாஜியால்தான் ஆட்சி அமைக்கமுடியும் என்று எல்லோரும் சொன்னபோது காமராஜரிடம் இருந்து முதலில் மறுப்பே வந்தது. இத்தனை சிரமப்பட்டது குருநாதரின் எதிரியை ஆட்சியில் அமர்த்தவா என்று யோசித்தார்.
“ஆட்சியே வேண்டாம், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம்’ என்று சொல்லிவிட்டார். மற்ற தலைவர்கள் வற்புறுத்தியதால் ராஜாஜியை முதல்வராக்கச் சம்மதித்தார் காமராஜர். அப்போதுகூட, “தேர்தலில் நிற்கமாட்டேன், மேலவை வழியாகவே வருவேன்” என்று நிபந்தனை போட்டுத்தான் முதல்வரானார் ராஜாஜி.
ஒரே கட்சியில் இருந்தபோதும் இருவருக்குமான மோதல்கள் தொடரவே செய்தன. குலக்கல்வித் திட்டச் சர்ச்சை வந்தபோது ராஜாஜிக்கு எதிராகவே இருந்தார் காமராஜர். மறைமுக நெருக்கடி கொடுத்தார். திட்டத்துக்கு ஆதரவு இருக்கிறதா என்பதை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் வைத்து தீர்மானிக்கலாம் என்று சொல்லி ராஜாஜிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். வாக்கெடுப்பு நடந்தால் தோல்வி நிச்சயம் என்பதால் பதவி விலகினார் ராஜாஜி. பின்னர் காமராஜர் முதல்வரானார். இது ராஜாஜி - காமராஜர் மோதலின் முக்கியமான அத்தியாயம்.
அதன்பிறகு நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் காமராஜர் எதிர்ப்பு நிலைப்பாட்டையே எடுத்தார் ராஜாஜி. காமராஜருக்கு எதிராக இருப்பவர்களை ஊக்குவித்தார்; பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ஆதரித்தார்; காமராஜரை எதிர்த்த காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியினரை ஆதரித்தார். உச்சக்கட்டமாக சுதந்தரா என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி காமராஜருக்கு நெருக்கடி கொடுத்தார்.
பல விஷயங்களில் இருவரும் நேரெதிர் நிலைப்பாட்டை எடுத்தவர்கள். முக்கியமாக, ம.பொ.சி மீது காமராஜருக்குப் பெரிய பிடித்தம் கிடையாது. ஆனால் ம.பொ.சியை அதிகம் அரவணைத்தவர் ராஜாஜி. திமுகவையும் அதிமுகவையும் ஒரே தட்டில் வைத்து எதிர்த்தவர் காமராஜர். ஆனால் ராஜாஜியோ, இரு கட்சிகளையும் வெவ்வேறு தருணங்களில் ஆதரித்தும் இருக்கிறார், எதிர்த்தும் இருக்கிறார்.
திமுகவை எதிர்க்கவேண்டும் என்பதற்காக 1971ல் ராஜாஜியும் காமராஜரும் கூட்டணி அமைத்தனர். அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இவர்கள் இருவரும் பெரும்பாலும் எதிரெதிர் முனைகளிலேயே இருந்துதான் அரசியல் செய்துள்ளனர்.
கருணாநிதி VS எம்.ஜி.ஆர்
அண்ணாவின் மரணத்துக்குப் பிறகு அமைந்த அமைச்சரவையில் ஆதித்தனாரைச் சேர்த்துக்கொண்டார் கருணாநிதி. அது எம்.ஜி.ஆருக்கு அதிருப்தியைக் கொடுத்தது. காரணம், ஆதித்தனாருக்கும் எம்.ஜி.ஆருக்கும் உரசல் ஏற்பட்டிருந்த சமயம் அது. என்றாலும், 1971ல் அமைந்த புதிய அமைச்சரவையில் எம்.ஜி.ஆர் இடம்பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். “மெடிக்கல் மினிஸ்டர் பதவி கேட்டார்’ என்று கருணாநிதியே பதிவு செய்திருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர் அமைச்சராகவில்லை. இதுதான் மோதலின் முக்கியப்புள்ளி.
அதன்பிறகு மதுவிலக்கை முன்வைத்து இருவருக்கும் இடைவெளிகள் ஏற்பட்டன. விரிசலை விரைவுபடுத்தியது மு.க. முத்துவின் திரைப்பிரவேசம். எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக முத்துவைக் கொண்டு வருகிறார், எம்.ஜி.ஆர் மன்றங்கள் மு.க.முத்து மன்றங்களாக மாற்றப்படுகின்றன என்று தொடர் சர்ச்சைகள். உச்சக்கட்டமாக, கட்சியினரின் சொத்துக் கணக்கைப் பொதுக்கூட்டம் ஒன்றில் கேட்டார் எம்.ஜி.ஆர். பொதுக்குழுவில் வைத்துக் கேட்க வேண்டிய விஷயம் என்றார் கருணாநிதி.
கலகம் வெடித்தது. கட்சி பிறந்தது. அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அன்று தொடங்கி அடுத்த பதினைந்து ஆண்டுகால தமிழக அரசியல் என்பது கருணாநிதி ஙண் எம்.ஜி.ஆர்தான். தேர்தல், கூட்டணி, குற்றச்சாட்டு, விசாரணை கமிஷன், ஆட்சிக் கலைப்பு என்று கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் மோதிக்கொண்ட களங்கள் ஏராளம்.
கட்சியில் இருந்து வெளியேறிய பதினேழாவது நாள் கருணாநிதி அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுப் பட்டியலைத் தயார் செய்து குடியரசுத் தலைவரிடம் கொடுத்து அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தினார் எம்.ஜி.ஆர். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கான பதில்களைப் புத்தகமாக அச்சிட்டு, சட்டமன்றத்தில் பதிவுசெய்தார் கருணாநிதி. இருந்தாலும், எம்.ஜி.ஆர் கொடுத்த புகார்ப் பட்டியல்தான் 1976ல் கருணாநிதி அரசு கலைக்கப்படுவதற்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தது.
திண்டுக்கல் இடைத்தேர்தல். கருணாநிதி - எம்.ஜி.ஆர் என்ற இருவரில் யாருக்குச் செல்வாக்கு அதிகம் என்பதை நிரூபிக்கும் தேர்தலாக அமைந்தது. ஆட்சி, அதிகாரம் எல்லாம் கருணாநிதியின் வசம் இருந்தன. ஆனால் எம்.ஜி.ஆரோ, கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டும் கையில் வைத்துக்கொண்டு வெற்றிக்கனியைப் பறித்திருந்தார். அதிலும், திமுக வேட்பாளருக்கு மூன்றாமிடம்தான் மிஞ்சியது.
எழுபதுகளின் மத்தியில் எமர்ஜென்ஸி என்கிற நெருக்கடி நிலையை அமல்படுத்தினார் பிரதமர் இந்திரா காந்தி. கண்டித்தார் கருணாநிதி. ஆனால் எம்.ஜி.ஆரோ அதிமுக செயற்குழுவில் எமர்ஜென்ஸிக்காக ஆதரவுத் தீர்மானம் நிறைவேற்றினார். பாராட்டினார்.
எம்.ஜி.ஆரின் குற்றச்சாட்டுகளை முன்வைத்து 1976ல் கருணாநிதி அரசைக் கலைத்தது மத்தியில் இருந்த இந்திரா காந்தி அரசு. அதனை, ‘ஜனநாயகத்தைப் பாதுகாக்க பிரதமர் இந்திரா காந்தி எடுத்த துணிச்சலான நடவடிக்கை’ என்று சிலாகித்தார் எம்.ஜி.ஆர். பின்னர் 1980ல் எம்.ஜி.ஆர் அரசு அதே இந்திரா காந்தியால் கலைக்கப்பட்டபோது, “மக்கள் தீர்ப்பை மதிக்காத இடி அமீன் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அக்கிரம அரசு கலைக்கப்பட்டது’ என்று குதூகலித்தது கருணாநிதியின் முரசொலி.
எம்.ஜி.ஆர் அரசுக்கு சட்டமன்றத்தில் அசுரபலம் இருந்தபோதுகூட நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவார் கருணாநிதி. ஆளுங்கட்சியின் மீதான விமர்சனங்களைப் பதிவுசெய்ய அவர் பயன்படுத்தும் உத்தி அது. கருணாநிதிக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்காகவே நாஞ்சில் மனோகரன், காளிமுத்து, பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோரை அதிமுகவுக்குக் கொண்டுவந்து அமைச்சராக்கியிருந்தார் எம்.ஜி.ஆர். குறிப்பாக, பல்கேரியா பால்டிகா கப்பல் வாங்கியதில் எம்.ஜி.ஆர் லஞ்சம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டை கருணாநிதி முன்வைத்தபோது, அதை வரிக்கு வரி மறுத்து அறிக்கை வெளியிடும் வேலையை நாவலர் நெடுஞ்செழியன் செய்தார்.
1980 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கருணாநிதிக்கு எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு சவால் வந்தது. “1977 தேர்தலில் நாங்கள் இந்திரா காங்கிரஸுடன் சேர்ந்து 35 இடங்களைப் பெற்றோம்.
நீங்கள் உண்மையான தமிழன் என்றால், உண்மையான திராவிடத் தொண்டன் என்றால், அத்தனை இடங்களையும் பிடியுங்கள். மேட்டில் நிறுத்தி மாலை போடுகிறேன்’ என்றார்.
அந்தத் தேர்தலில் திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களைப் பிடித்தது. திமுக போட்டியிட்ட 16 இடங்களையும் வென்றது. எம்.ஜி.ஆருக்கு எதிரான மோதலில் கருணாநிதி ஜெயித்தது அநேகமாக இந்தச் சவாலில் மட்டும்தான். ஏனைய மோதல்கள் அனைத்திலும் பெரும்பாலும் வெற்றிமாலை எம்.ஜி.ஆருக்கே விழுந்தன.
கருணாநிதிக்கு எதிராக சர்க்காரியா கமிஷன் அமைவதற்குக் காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அந்தக் கமிஷன் அறிக்கையில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் எல்லாம் சேர்க்கப்பட்டன. அதேபோல, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எரிசாராய ஊழல் வெடித்தபோது ரே கமிஷனை அமைக்க கருணாநிதி எடுத்த முயற்சிகள் அநேகம். எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியை முன்வைத்தே எரிசாராய ஊழல் புகார் எழுப்பப்பட்டிருந்தது.
சத்துணவு, உலகத்தமிழ் மாநாடு, காஞ்சிபுரம் பெரியார் சிலை, நீதிகேட்டு நெடும்பயணம், மேலவைக் கலைப்பு என்று கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் இறுதிவரை அரசியல் எதிரிகளாகவே இயங்கினர். அதன் தொடர்ச்சியே, கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடந்துகொண்டிருக்கும் கருணாநிதி Vs ஜெயலலிதா மோதல்!
டிசம்பர், 2013